போலி நகைகளை அடகு வைத்து கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு...
காரைக்குடி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து முறைகேடு குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சித்திவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, போலி நகைகளை அடகு வைத்து சிலர் முறைகேடு செய்துள்ளதாக அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பாண்டி புகார் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுச் சங்கங்களின் இணை, துணை பதிவாளர்கள் ஆகியோருக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து காரைக்குடி சரக துணைப் பதிவாளர் செந்தில்குமார் விசாரணையைத் தொடங்கினார். இதுகுறித்து முன்னாள் தலைவர் பாண்டி கூறுகையில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர். இதற்கு ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். துணைப் பதிவாளர் செந்தில்குமார் கூறுகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறுகின்றனர். அதற்கான ஆதாரங்களைக் கேட்டுள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.