மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நபர்கள், மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த தகுதியான நபர்கள், மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) பெறுவதற்கு, www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது. ஆதிதிராவிடர்/பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், பி.எஸ்.சி/எம்.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 21 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, இப்பயிற்சிக்கான இரண்டு மாத கால அளவும், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலை வாய்ப்பும், ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சி பெறுவதற்கு, தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.