பந்தயத்தால் பறிபோனதா உயிர்....? ஜல்லிக்கட்டு காளை முட்டி மாணவர் பலி 

துயரச் சம்பவம்;

Update: 2025-03-05 17:05 GMT
தஞ்சாவூரில், 250 ரூபாய் பந்தயத்தால், ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற போது, மாடு முட்டியதில் 10 ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே வல்லம், சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த இசையாஸ் – மேரி கிரேஸி தம்பதியின் மூன்றாவது மகன் திரண்பெனடிக்ட் (15), வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு, திரண்பெனடிக்ட் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது, அற்புதாபுரம் பகுதி தோப்பு ஒன்றில், கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை திரண்பெனடிக்ட் பிடிக்க முயற்சி செய்த போது, மாடு நெஞ்சில் குத்தியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திரண்பெனடிக்ட் பரிதாபமாக இறந்தார். மாணவரின் பெற்றோர் வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு வரவில்லை என கூறி, அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு காளை முட்டியதில், திரண்பெனடிக்ட் இறந்து விட்டதாகவும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்நிலையில், புதன்கிழமையன்று காலை, தஞ்சாவூர் ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் முன்பு, திரண்பெனடிக்ட் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். பிறகு ஆட்சியரிடம் மாணவனின் தாய் மேரி கிரேஸி அளித்த மனுவில், "அற்புதாபுரம் பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், எனது மகனிடம் மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க சென்ற போது காளை மாடு முட்டி என் மகன் இறந்துவிட்டார். என் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். மேலும் அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., நீலமேகத்தினை சந்தித்தும் முறையிட்டனர். இது குறித்து வல்லம் காவல்நிலையத்தில் திரண்பெனடிக்ட் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News