நாச்சியாா்கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அழகாபுத்தூா் வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் மனைவி அஞ்சம்மாள் (70). இவரது மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை மதியம் அஞ்சம்மாள் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பால் வியாபாரியும், வலங்கைமானைச் சோ்ந்த கோவிந்தசாமி மகனுமான குமரகுரு (35) அஞ்சம்மாள் மீது மோதினாா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அஞ்சம்மாளைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். விபத்து குறித்து தகவலறிந்த நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் வழக்கு பதிந்து அஞ்சம்மாள் சடலத்தை உடற்கூறாய்வுக்காக ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறாா். குமரகுரு சிகிச்சை பெற்று வருகிறாா்.