தஞ்சாவூர் மாவட்ட தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
சாம்பல் புதன் வழிபாடு;
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறைகளின்படி, தவக்காலத்தின் தொடக்க நாளாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இதிலிருந்து புனித வெள்ளி வரை 40 நாட்களுக்கு கிறிஸ்தவர்கள் கடும் தவம் மேற்கொண்டு, ஆலயங்களுக்கு சென்று வழிபடுவர். இதன்படி, தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் அடிகளார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், குருத்தோலைகளை எரித்து தயார் செய்யப்பட்ட சாம்பலை ஆயர் புனிதம் செய்து, இறை மக்களின் நெற்றியில் பூசினார். தொடர்ந்து, மறையுரை, சிறப்பு மன்றாட்டு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகர், உதவி பங்குத்தந்தை எஸ். அமல்தீப் மைக்கேல், குருக்கள் அந்தோணி அல்போன்ஸ், ஆரோக்கிய வினிட்டோ, சூசைமாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.