தமிழ்நாட்டில் தொகுதிகளைக் குறைத்தால் தமிழக பாஜக ஏற்காது : கருப்பு முருகானந்தம் பேட்டி

பாஜக கையெழுத்து இயக்கம்;

Update: 2025-03-07 05:27 GMT
தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ குறைப்பதாக அறிவித்தால், அதை தமிழக பாஜக ஏற்காது என்றார் பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பாஜக சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், தமிழகத்தில் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி கையொப்பம் பெற்று, பாஜகவின் தமிழக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கவுள்ளோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 லட்சம் கையொப்பம் பெறவுள்ளோம். இந்தக் கையெழுத்து இயக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் பொதுமக்களிடம் உள்ளது. மக்கள் ஆதரவும் பெருகியிருக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ சொல்லவில்லை. திமுக கூட்டணியினர்தான் கற்பனையாகச் சொல்கின்றனர். மத்திய உள் துறை அமைச்சர் கூறுகையில், பிரதிநிதித்துவ அடிப்படையில் இருக்கைகள் அதிகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு 8 தொகுதிகள் குறையும் என மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ கூறினால், அதை தமிழக பாஜகவும் ஏற்றுக் கொள்ளாது. அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழக பாஜகவும் கலந்து கொள்ளும். ஆனால், தொகுதிகள் குறையாது என ஆளும் அரசும், எங்களது கட்சியும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கற்பனையான, பொய்யான குற்றச்சாட்டை சொல்லும்போது, எதிர்ப்புக் கூட்டத்தில் எப்படிக் கலந்து கொள்ள முடியும் என்றார் கருப்பு முருகானந்தம். அப்போது, பாஜக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் பி.ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News