தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் குறும்படம் – ஆவணப்படம் உருவாக்கும் உத்திகள் குறித்த பயிற்சி

ஆவணப் படம்;

Update: 2025-03-07 14:25 GMT
தமிழ் குறும்பட உருவாக்க உத்திகள் மற்றும் ஆவணப்படங்களில் வரலாற்றைப் பேசுதல் என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் மாணவர்களுக்கு ஆவண மற்றும் குறும்படங்களை உருவாக்கும் உத்திகள் குறித்த இருநாள் பயிற்சிக் கருத்தரங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் நடைபெற்றது.  பிரபல ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, சென்னை தமிழ் ஸ்டுடியோ மற்றும் பியூர் சினிமா நிறுவனர் மோ.அருண் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.   தமிழில் வெளிவந்த ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடல், குறும்படங்களை உருவாக்கும் உத்திமுறைகள், ஆவணப்படங்கள் வாயிலாக வரலாற்றைப் பதிவு செய்தல் போன்ற பயிற்சிகள் மாணாக்கர்களுக்கு அளிக்கப்பட்டன.  இந்நிகழ்வின் தொடக்க விழாவில் உரை நிகழ்த்திய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் முனைவர் சி.அமுதா பேசுகையில், "தமிழ் பயிலும் மாணக்கர்கள் வேறு துறைகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பயிற்சிக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது" என்றார்.  துணைவேந்தர் பொறுப்புக்குழுவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் மருத்துவர் பாரதஜோதி, இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் நளினி உள்ளிட்டோர் மாணவர்களிடையே கருத்துரை ஆற்றினர். ஆவணப்படங்களின் தேவை குறித்து இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் மு.மு.ஜெயசீலன் பேருரை ஆற்றினார்.  இப்பயிற்சிக் கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 108 மாணாக்கர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பங்கேற்ற மாணாக்கர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவருமான முனைவர் குறிஞ்சிவேந்தன், பேராசிரியர்கள் ஞா.பழனிவேலு, தெ.வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Similar News