பேராவூரணி அருகே, நூறு நாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியைக் கேட்டு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம் ;
கடந்த மூன்று மாத காலமாக 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்யும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 100 நாள் வேலத் திட்ட சம்பளப் பணத்தை விடுவிக்காமல், தமிழக விவசாயிகளை பழிவாங்கும் போக்கைக் கண்டித்தும், உடனடியாக நிதியை விடுவித்து, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பளம் ரூ.319 ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காத்திருப்பு போராட்டம் துவங்கியது. விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.சுந்தரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வீ. கருப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், விவசாயத் தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் ஆர்.மகாலிங்கம், துணைத் தலைவர் இளங்கோ, சிவனேசன், மணக்காடு கிளை பொறுப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், இந்திரா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீ மகேஷ் மற்றும் அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பத்து தினங்களுக்குள் சம்பள பாக்கி வழங்கப்படும். வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் காத்திருப்பு போராட்டம் மதியம் 1 மணி அளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பெட்டிச் செய்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பாத்திரத்தை வைத்து உணவுக்காக சமையல் செய்ய முயன்ற போது, பேராவூரணி காவல்துறை பெண் ஆய்வாளர் பசுபதி என்பவர், பாத்திரங்களை தட்டிவிட்டும், பற்ற வைத்த அடுப்பில் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்து அராஜகமாக நடந்து கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு, பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறை அராஜகத்தால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பட்டினியாக திரும்பிச் சென்றனர்.