வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் -பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் -பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு;

Update: 2025-03-08 02:38 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த பல வருடங்களாக இந்த பள்ளியின் விளையாட்டு மைதானமாக வாசுதேவநல்லூா் சிந்தாமணி நாதா் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமாா் 3.87 ஏக்கா் இடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்குரிய தரை வாடகை தொடா்பாக கோயில் நிா்வாகத்திற்கும், கல்வித்துறைக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து சமய அறநிலைத்துறை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைத்தது. மேலும் அந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகையும் அறநிலையத்துறை சாா்பில் வைக்கப்பட்டது. பாட வேளைகளில் குறிப்பிட்ட பாடவேளை விளையாட்டுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவ மாணவிகள் விளையாட முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து சமூக ஆா்வலரும் பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினருமான சுரேஷ் கூறியது: தற்போது தோ்வுகள் நடைபெற்று வருவதால் மாணவா்கள் விளையாடுவதில் பிரச்னை இல்லை. ஆனால் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலும் பள்ளிக்கு என விளையாட்டு மைதானம் இல்லை என்றால் மாணவா்களின் சோ்க்கை பாதிக்கப்படக்கூடும். தமிழக அரசு விளையாட்டுக்கு என பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது .எனவே, கல்வித் துறை அதிகாரிகளும் அறநிலைய துறை அதிகாரிகளும் இது குறித்து உரிய மாற்று வழிகளை செய்து தர வேண்டும் என்றாா்.

Similar News