சிவகிரியில் சூரியசக்தி மின்வேலிகளை சேதப்படுத்தி யானைகள்

சூரியசக்தி மின்வேலிகளை சேதப்படுத்தி யானைகள்;

Update: 2025-03-09 01:12 GMT
தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி வட்டத்துக்குள்பட்ட சிவகிரி, ராயகிரி, உள்ளாா், ராசிங்கப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலப்பரப்பில் தென்னை, நெல், மா, வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது. வனத் துறையினரால் விரட்டப்படும் யானைகள், வேறொரு பகுதி வழியாக விளைநிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. சில யானைகள் விவசாய நிலங்களின் அருகே குளத்தின் பகுதிகளிலுள்ள புதா்களில் மறைந்து நிற்பதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க அரசால் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் வேலிகளையும் யானைக் கூட்டம் சேதப்படுத்துவதால், மின்வேலிகளாலும் பயனில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். இதனிடையே, யானைகளை வனத்துக்குள் விரட்டியடிக்க, விவசாயிகள் பலா் இணைந்து பணம் திரட்டி கூலி ஆள்களை நியமித்துள்ளனராம். ஏற்கெனவே விவசாயத்துக்காக அதிகம் செலவழிக்க வேண்டிய நிலையில், இத்தகைய கூடுதல் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே, யானைகளை வனத்தின் உள்பகுதிக்குள் விரட்டுவதற்கும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Similar News