சாலையில் சுற்றித் திரியும் ஆடுகள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
தாராபுரத்தில் சாலையில் சுற்றித் திரியும் ஆடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழந்துள்ளது;
தாராபுரம்-கரூர் சாலையில் தாலுகா அலுவலகம், கோர்ட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் என ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தாராபுரம் வந்து செல்கிறார்கள். தாராபுரத்தில் பிரதான சாலைகளான தாராபுரம்-கரூர் சாலை, உடுமலை சாலை, அலங்கியம் சாலை, பொள்ளாச்சி சாலை, பூளவாடி சாலை, டி.எஸ்.கார்னர், பூக்கடை, பொள்ளாச்சி சாலை, ஐந்து முக்கு ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆனால் இந்த பிரதான சாலைகளில் ஆடுகள் நடமாடுவதால் வாகனங்களில் எளிதாக கடந்து செல்ல முடிய வில்லை. மேலும் சாலையோர குப்பை தொட்டிகளில் கிடைக்கும் உணவுகளை உண்பதற்காக திடீரென்று சாலையின் குறுக்கே செல்லும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.அது மட்டுமல்ல அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்சுகளும் விரைந்து வரமுடியவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் ஆடுகளை யாருடைய ஆடு என கண்டறிந்து அந்த ஆடுகளை சாலையில் சுற்றித் திரியாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஆட்டினுடைய உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்