விலை சரிவு எதிரொலி பறிக்காமல் செடியில் பழுத்து அழுகும் தக்காளிப் பழங்கள்
பல்லடத்தில் விலை சரிவு எதிரொலி பறிக்காமல் செடியில் பழுத்து அழுகும் தக்காளிப் பழங்கள்;
பல்லடம் வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி 500 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர். கடந்த மாதங்களில் விதைக்கப்பட்ட தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான விளைச்சல் ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பல்லடத்தில் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. மேலும் சரக்கு வாகனங்களிலும் தெருத்தெருவாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சரிந்ததால் ஒரு சில விவசாயிகள் தோட்டங்களில் தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதுகுறித்து பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிட்ட தக்காளி உரிய விலை இல்லாததால் பறிக்காமல் செடியிலேயே விடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி கோபால் கூறுகையில், கடந்த பருவத்தில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நல்ல விலை கிடைத்ததால், எங்கள் பகுதியில் தக்காளி சாகுபடி செய்தோம். தக்காளி செடிகள் நன்கு வளர்ந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு சென்ற போது 14 கிலோ எடை கொண்ட பெட்டி 500 ரூபாய் விற்பனையானது. ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தக்காளி விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகிறோம். விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலிக்கும், தக்காளி கொண்டு செல்லும் வண்டி வாடகைக்கும் கூட கட்டுப்படியாகத நிலை உள்ளது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.40 க்கு கேட்கின்றனர். வேறு வழியில்லாமல் கேட்ட விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செடியிலேயே விட்டுவிடுவது மேல் என்று சித்தம்பலம் பகுதியில் சுமார் 100 ஏக்கர்களில் தக்காளி பறிக்காமல் செடிகளிலேயே விட்டு அழித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.