நுகர்வு குறைந்ததால் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி பண்ணையாளர்கள் கவலை
நுகர்வு குறைந்ததால் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி பண்ணையாளர்கள் கவலை ;
பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத் தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்போது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் 2 வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக் கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழி வகை. பல்லடம் பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி விற்பனையை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். கறிக்கோழி விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். பொதுவாக சபரிமலை சீசன் மற்றும் மார்கழி மாதங்களில் கறிக்கோழி விற்பனை குறைந்து கொள்முதல் விலை சரியும். மற்ற மாதங்களில் சராசரியாகவும், ஆடி மாதம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான், போன்ற பண்டிகை காலங்களில் விலை உயர்ந்தும் காணப்படும். இதற்கிடையே தற்போது ரம்ஜான் நோன்பு மற்றும் ஈஸ்டர் தவக்காலம் தொடங்கி உள்ளதால்,கறிக்கோழி நுகர்வு குறைந்து, கறிக்கோழி கொள்முதல் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி சின்னச்சாமி கூறியதாவது:- கறிக் கோழி நுகர்வு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருப்பதாலும், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் தவக்காலம் தொடங்கி உள்ளதாலும், திருமண முகூர்த்தம் மற்றும் கோவில்கள் கும்பாபிஷேக விழா என பல்வேறு விழாக்கள் அதிகமாக உள்ளதாலும், கறிக்கோழி நுகர்வு குறைந்து உள்ளது. இதனால், கொள்முதல் விலை சரிவை சந்தித்துள்ளது. கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கொள்முதல் விலை ரூ.86 ஆக இருந்தது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.100 செலவாகும் நிலையில் தற்போது ரூ.16 நஷ்டமாகும் சூழல் உள்ளது. தொடர்ந்து கொள்முதல் விலை சரியும் பட்சத்தில், கறிக்கோழி உற்பத்தி குறைப்பு செய்து, விலையை சீராக்க முடிவு செய்துள்ளோம்.சில வாரங்களில் ரம்ஜான் பண்டிகை ஆகியவற்றின் போது நுகர்வு அதிகமாகி விலை சீராகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.