பல்லடம் அருகே ஏடிஎம் எந்திரத்தை கல்லால் உடைக்க முயன்ற வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பல்லடம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைக்க முயன்ற வாலிபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2025-03-11 00:37 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில், ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறைக்குள் வாலிபர் ஒருவர் சென்று எந்திரத்தை காலால் உதைப்பதும், பின்னர் வெளியே சென்று கல் ஒன்றை எடுத்து வந்து உடைப்பதும் என அடாவடி செயல்களில் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து அந்த நபர், அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா முன் ஏதோ பேசிவிட்டு, கதவை உதைத்தப்படி வெளியே சென்று உள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைக்க முயன்ற வாலிபர் திருட முயற்சி செய்தாரா? அல்லது மது போதையில் இப்படி நடந்து கொண்டாரா அல்லது மனநோயாளியா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News