தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக ரவுடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பி.குறுந்தையன் (50). இவர் அப்பகுதியிலுள்ள தனது தோப்புக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஏழுப்பட்டி டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற இவரது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையனை காரிலிருந்து இறங்கிய நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதனால், பலத்த காயமடைந்த குறுந்தையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் நிகழ்விடத்துக்கு ஓடி வந்த அப்பகுதி மக்கள், அரிவாளால் வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். இவர்களில் ஒருவர் பிடிபட்டார். தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், காவல் துறையினரின் ரவுடி பட்டியலில் குறுந்தையன் இடம்பெற்றுள்ளதும், இவர் அப்பகுதியில் 2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகநாதன் கொலை வழக்கு, 2014 ஆம் ஆண்டில் உதயா கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், பொதுமக்களிடம் சிக்கிய நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வடிவேலன் (38) என்பதும், ஏழுப்பட்டியைச் சேர்ந்த ரவி மகன் ஒத்தக்கை ராஜா என்கிற ராஜாவுக்கும் (42) மற்றும் அவரது நண்பர்களுக்கும் கொலைச் சம்பவத்தில் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. எனவே, ஏற்கெனவே நிகழ்ந்த கொலை சம்பவத்துக்கு பழிவாங்குவதற்காகக் குறுந்தையன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ராஜா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.