அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்பு
போட்டித் தேர்வு;
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC தொகுதி IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்ட கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி –IV தேர்வில் 14 மாணவர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட காவலர் தேர்வில் 3 மாணவர்களும் வெற்றி பெற்று அரசுப்பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள, தொகுதி- I தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இத்தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் 13.03.2025 (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.