திருவிளையாட்டம் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டத்தில்திருவிளையாட்டம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், அய்யனார் பிடாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தில் ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பிடாரியம்மன் கோயில்கள் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயங்களில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கிராம வாசிகள் மற்றும் வெண் கதிர் நற்பணி சங்கம் சார்பில் பொதுமக்கள் பங்களிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் கால யாகசாலை பூஜையில் பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஸ்ரீ விநாயகர், சத்தமாதா என்கிற பிடாரியம்மன் தர்மசாஸ்தா(எ) ஸ்ரீ அய்யனார் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரசித்தி பெற்ற ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற மகா மாரியம்மன் கும்பாபிஷேகத்தில் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத பூஜிக்கப்பட்ட புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.