கலச பூஜையில் தங்கச்சங்கிலியை வைத்து வழிபாடு என நூதன முறையில் மோசடி செய்தவர் கைது

அவிநாசி அருகே கலச பூஜையில் தங்கச்சங்கிலியை வைத்து வழிபட்டு மீண்டும் அணிந்தால் செல்வம் பெருகும் என ஆசை காட்டி இரு மூதாட்டிகளிடம் இருந்து 12 பவுன் தங்கச்சங்கிலிகளை நூதன முறையில் மோசடி செய்தவரை சேயூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.;

Update: 2025-03-15 08:25 GMT
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து வடுகபாளையம் தண்டுக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசை மனைவி வள்ளியம்மாள் (75), இவரது தங்கை பூவாத்தாள் (72), கணவனை இழந்த இரு மூதாட்டிகளும் ஒன்றாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். வள்ளியம்மாளின் மகன் தம்பிராசு அம்மாவின் வீட்டருகே வசித்து வருகிறார். வள்ளியம்மாளின் பக்கத்து தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த, திருப்பூர், 15 வேலம்பாளையம், நேரு நகர் பகுதியை சேர்ந்த குனசேகர் மகன் சிவச்சந்திரன் (34) என்ற இளைஞர் வள்ளியம்மாள் வீட்டில் அருகில் உள்ள அறையில் ஒரு வருடமாக வாடகைக்கு தங்கி அனைவரிடம் நன்றாக பழகி வந்த நபராக இருந்து வந்தவர். தனக்கு பத்திரகாளி அம்மனின் அருள் இருப்பதாகவும் அவ்வப்போது தன் மீது சுவாமி வந்து அருள்வாக்கு கூறிச் செல்லும் என்று கூறிவந்துள்ளான். கடவுள் விஷயம் என்பதால் சிவச்சந்திரனை வள்ளியம்மாள் முழுமையாக நம்பி தனது தங்கச் சங்கிலியையும் தங்கை பூவாத்தாள் தங்கச் சங்கிலியையும் சேர்த்து 12 பவுன் அளவுள்ள 3 தங்கச் சங்கிலிகளை சிவச்சந்திரனிடம் கலச பூஜைக்கு வள்ளியம்மாள் கொடுத்துள்ளார். சிவச்சந்திரன் தனது அறையில் கலசம் வைத்து பூஜை செய்து சாமி கும்பிட்டு வருவதாகவும், உங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை கழற்றி சாமி கலசத்தில் வைத்து பூஜை முடித்து சில நாட்களில் அதை எடுத்து கழுத்தில் போட்டால் செல்வம் பெருகும் என்றும் கூறியுள்ளனர். அதற்கு பதிலாக தன்னிடம் உள்ள இரண்டு தங்கச்சங்கிலிகளை தருகிறேன் அதுவரையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி, மூதாட்டிகள் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்கச் சங்கிலிகளை வாங்கி கலசத்தில் போட்டுவிட்டு, கவரிங் சங்கிலிகளை வள்ளியம்மாள் மற்றும் பூவாத்தாளுக்கு கொடுத்துள்ளார். மேலும், அவர்களிடம் பணம் இருந்தால் கலசத்தில் வையுங்கள் என்றும் கூறியுள்ளார். அதற்கு மூதாட்டிகள் தங்கள் கையில் தற்போது பணம் இல்லை என கூறியதால், உங்கள் நகைகள் மட்டும் கலசத்தில் இருக்கட்டும் என்று கூறி பூஜை செய்து வருவது போல பாசாங்கு செய்து வந்துள்ளார். இந்நிலையில், வள்ளியம்மாளின் மகன் தம்பிராசு, தாயைப் பார்க்க வந்த போது தனது அம்மாவும் சித்தியும் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலிகளை பார்த்த போது, சந்தேகம் அடைந்து அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள எங்கே என்று கேட்டுள்ளார். இதையடுத்து வள்ளியம்மாள் நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக தம்பிராசு சிவச்சந்திரனிடம் மூதாட்டிகள் இடம் வாங்கிய நகை குறித்து கேட்டதற்கு, நகை எல்லாம் கலசபூஜையில் உள்ளது என்றும் நாளை பூஜை முடிந்ததும் எடுத்து தருகிறேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்து விட்டு, சகஜமாக இருந்துள்ளார். இந்நிலையில், தோட்டத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மூதாட்டிகளிடம் ஏமாற்றிய தங்கச்சங்கிலிகளுடன் தலைமறைவாகியுள்ளான் சிவச்சந்திரன். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வள்ளியம்மாள் மற்றும் பூவாத்தாள் தனது மகன் தம்பிராசு உடன் சென்று சம்பவம் குறித்து சேயூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நூதன மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவான சிவச்சந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு சிறையிலடைத்தனர். கலச பூஜை என கூறி மூதாட்டிகளிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலிகளை மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 26-9-2024 அன்று இதே பகுதியில் வசிப்பவர்களிடம் நகை பாலிஷ் போட்டு தருவதாக கூறி வட மாநிலத்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு அதில் 15 வட மாநிலத்தவர்களை சேவூர் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News