சேலம் காப்புக்காடு பகுதியில்

நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்;

Update: 2025-03-16 03:37 GMT
தமிழ்நாடு வனத்துறை சார்பில் நீர்நிலை பறவைகள் மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 6, 9-ந் தேதிகளில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு செய்யும் பணி மாநிலம் முழுவதும் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் ஆகிய இரு வனக்கோட்டங்களிலும் நேற்று காலை முதல் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, வாழப்பாடி, மேட்டூர் ஆகிய வனச்சரகங்களிலும், ஆத்தூர் வனக்கோட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, தும்பல், கெங்கவல்லி, கருமந்துறை ஆகிய வனச்சரகங்கள் என மாவட்டம் முழுவதும் சுமார் 20 இடங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த பணிகளில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தொலைநோக்கி, கேமராக்கள் மூலம் பறவைகளை பார்த்து குறிப்பெடுத்து பறவைகள் குறித்தும், அது எந்த வகையை சேர்ந்தது? என்பது குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வனத்தை ஒட்டியுள்ள காப்புக்காடுகள், கிராம பகுதிகளில் மயில், குயில், சிட்டுக்குருவி, கிளி, புறா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றும், இக்கணக்கெடுப்பு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News