சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை:
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் பணி இடைநீக்கம்;
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி, புது குடியானூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி (வயது 54) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவிக்கு சமீபத்தில் உணவு இடைவேளையின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறி அழுத நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் உள்பட குழுவினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வந்த தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு, ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனியை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.