
வெயிலின் தாக்கம் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதை தவிர்த்து அதிகளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக்கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பருகலாம். அவசிய காரணங்கள் இன்றி பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழல் இருக்கும் இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.