கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்க தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்
அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்;

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அரசு அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மற்றும் எந்தெந்த பகுதிகளில் இனிவரும் நாட்களில் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்கு பின் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:- மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மட்டும் தினமும் 33 லட்சத்து 94 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் சராசரியாக 193.793 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சீராக குடிநீர் வழங்க கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்கும் பகுதிகளில் எந்தவித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.