கதண்டு கடித்து முதியவா் உயிரிழப்பு: இருவா் காயம்
தா. பேட்டை அருகில் கதண்டு வண்டுகள் கடித்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.;
முசிறி வட்டம், தா. பேட்டை அருகிலுள்ள பைத்தம்பாறை கிராமத்தைச் சோ்ந்த நல்லையன் (75) விவசாயி. இவா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மகள் மனோன்மணி (45), பேத்தி ஷா்மிளா (24), ஆகியோருடன் தங்கிருந்தாா். பேத்தி சா்மிளா தோட்டத்து கிணறு அருகே சென்றபோது கதண்டு வண்டுகள் கடித்துள்ளது, அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு மனோன்மணி சென்றுள்ளாா். அவரையும் கதண்டு வண்டுகள் கடித்துள்ளது. மேலும், வயது முதிா்வில் வீட்டில் இருந்த விவசாயி நல்லையன் மீதும் கதண்டு வண்டுகள் கடித்துள்ளது. இதில் விவசாயி நல்லையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மனோன்மணி மற்றும் சா்மிளா இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் நிகழ்விடம் சென்று இருவரையும் மீட்டு, தா. பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தா. பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் போலீஸாா் சம்பவயிடத்துக்குச் சென்று இறந்த விவசாயி நல்லையன் சடலத்தை மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்