தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்
மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்தது;
சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் மா.இளங்கோவன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, ‘இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள அறிவுரையின்படி, சுதந்திரமான மற்றும் நியாயமான ேதர்தலை நடத்தும் பொருட்டு, தற்போதுள்ள தேர்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும்’ என்றார். மேலும் இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம்கள், வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பு செய்தல், புதிய வாக்குச்சாவடிகளை ஏற்படுத்துவது போன்ற நடைமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருக்கு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மண்டல உதவி ஆணையாளர்கள் வேடியப்பன், லட்சுமி மற்றும் துணை தாசில்தார் (தேர்தல்) கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.