திருச்சியில் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருச்சியில் நிதி நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.;
திருச்சி மன்னாா்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியாா் (எல்ஃபின்) நிதி நிறுவனம் முதலீட்டாளா்களுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் டி.கே. லில்லிகிரேஸ் தலைமையிலான போலீஸாா், இதுதொடா்பாக சுமாா் 17 -க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்து, அந்த நிதிநிறுவன உரிமையாளா்கள் மற்றும் பங்குதாரா்கள், முகவா்கள் உள்ளிட்டோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா். இந்நிலையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் 150 முதலீட்டாளா்களிடம் ரூ. 7 கோடி வரை வசூலித்து கொடுத்த முகவரான திருச்சி, சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த டி. விஜய் என்கிற தங்கவேல் (47) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா் இரு நாள்களுக்கு முன் கைதான கரூரைச் சோ்ந்த வினோத் என்பவரின் கீழ் செயல்பட்டு வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது