போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்த தகவல் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்
புதிய செயலி அறிமுகம் ;
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், சுமார் 80க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிந்தபடியும், 50க்கும் மேலான ஆட்டோக்களுடன் ஓட்டுநர்களும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இதில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்தும், போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து குறித்து தங்களுடைய சுயவிவரங்களின்றி புகார் செய்வதற்கு DRUGFREETN என்ற அலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்வது தொடர்பான ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆனந்த், பாபு, சரவணன், உதவிக் கோட்டப் பொறியாளர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கலால்)(பொ) பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.