ஆண்டிமடம் ஒன்றியம் ஜெ. மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

ஆண்டிமடம் ஒன்றியம் ஜெ. மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது;

Update: 2025-03-21 18:30 GMT
அரியலூர் மார்ச்.21- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் ஜெ. மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் தில்லைராணி வரவேற்றார். ஆண்டறிக்கையை ஆசிரியர் அபிராமி வாசித்தார். ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் பேசுகையில் மாணவர்கள் சேர்க்கை பற்றியும், அரசுபள்ளிகளே மாணவச்செல்வங்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு ஆணி வேர் என்று கூறினார். தனியார் பள்ளி விளம்பரங்களை விட அரசுப்பள்ளிகளுக்கு பெற்றோர்களின் முன்மொழிவே சிறந்த விளம்பரம் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய தமிழ்வழிக் கல்விக்கு 20 விழுக்காடு முன்னுரிமை, மருத்துவம், பொறியியல் துறை போன்ற பல துறைகளுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு போன்ற பல புதிய திட்டங்களை அரசு அறிவித்துக் கொண்டே உள்ளது, பெற்றோர்களே பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனவும் கூறினார். ஆசிரியர் பயிற்றுநர் இரவிச்சந்திரன் பேசுகையில் தொடர்ந்து சிறப்பாக கல்வி கற்பதன் மூலமாகவே அறிவியல் ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் போன்று வர முடியும் என்றார். இப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறையுடன் கல்வி கற்பிக்கக்கூடியவர்கள், மிகவும் திறமையானவர்கள் என்றும் ஜெ. மேலூர் பள்ளி ஆசிரியர்கள் போன்று செயல்பட்டால் தனியார் பள்ளிகளே இருக்காது என கூறி ஜெ. மேலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பிலேயே சேருங்கள் என பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தார்.பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பேசும்போது ஆசிரியர்களின் பணிகளையும், மாணவர்களின் திறமையையும் தான் நேரில் பார்த்துகொண்டிருப்பதாக பாராட்டி பேசினார்.பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் மொத்தம் 127 பேர்.விளையாட்டுப் போட்டி,பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஆண்டிமடம் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் என அனைவருக்கும் 133 மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் என அனைவரும் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பானுமதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர்கள், ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மணிமாறன் ஆசிரியரும்,ஆசிரியர் நளினி நன்றி கூறினார்.

Similar News