முப்பதாயிரம் மாணவ மாணவிகள் காவல் செயலி பதிவிறக்கம் செய்து சாதனை

முப்பதாயிரம் மாணவ மாணவிகள் காவல் செயலி பதிவிறக்கம் செய்து சாதனை;

Update: 2025-03-22 11:12 GMT
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆபத்து ஏற்படும் நிமிடத்திலேயே காவல்துறைக்கு தகவல் கொடுக்க உதவும் வகையிலும் பெண்களுடன் எப்பொழுதும் காவல்துறை பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாகவும் காவல் உதவி என்கிற செயலி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தமிழ்நாடு அரசு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த செயலியை 30,000 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாக திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் அட்மின் இயக்குநர் மோகன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். ஏடிஎஸ்பி சண்முகம், திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி காவல் உதவி 181என்ற வடிவத்தில் தமிழ்நாடு போலீஸ் என முட்டை வடிவில் மாணவ மாணவிகள் அணிவகுத்து நின்று ஒரே நேரத்தில் செல்போனை அசைத்து காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல் உதவி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்போதும் அல்லது வேறு எந்த வகையான பிரச்சனைகள் ஏற்படும் போதோ அவசரத்திற்கு இந்த செயலியை பயன்படுத்த முடியும் காவல் உதவி செயலியில் 14 வகையான இதர சேவைகளும் உள்ளடங்கி இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வினை இன்று திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கற்றுத் தந்து 30 ஆயிரம் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில்செல்போன்களில் காவல் உதவி செயலியை டவுன்லோட் செய்து உள்ளார்கள். இது மட்டுமில்லாமல் இவர்கள் குறைந்த பட்சம் தங்கள் 5 உறவினர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தினால் அதிகமாக டவுன்லோடு செய்ய உதவியாக இருக்கும். இதனை செய்து தருவதாக மாணவ மாணவிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த காவல் உதவி செயலி மூலம் புகார்கள் பதிவாகி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது 80 புகார்கள் பதிவாகி உள்ளது. பெண்கள் தொடர்பான குற்றங்கள் நம்மிடம் பதிவாகிறது. அதற்கான விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. செயலியில் வரும் புகார்களுக்கு முன்னுரிமை தருகிறோம். பெண்கள் தங்களின் உரிமைகள் என்ன பாதுகாப்பு அம்சங்கள் என பாதுகாப்பு சட்ட திட்டங்கள் என என்ன என்ன என அறிந்து கொள்ள முன்னர் புகார் செய்யாமல் இருந்தனர் தற்போது புகார் செய்ய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதையே நாங்கள் எங்கள் வெற்றியாக பார்க்கிறோம். என கூறினார்

Similar News