ஆரம்பக் கல்வியை தாய் மொழியிலேயே கற்க வேண்டும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு
ஆரம்பக் கல்வியை தாய் மொழியிலேயே கற்க வேண்டும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பள்ளி ஆண்டு விழாவில் பேசினார்.;
அரியலூர் மார்ச்.22- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித்தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆண்டிமடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இலையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்அறிவழகன், இலையூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் கலையரசி வரவேற்றார் .பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வாசித்தார். ஆண்டுவிழா நிகழ்ச்சி தொகுப்பாளராக செல்வக்குமார் ஆசிரியர் செயல்பட்டார். ஆண்டிமடம் மேற்பார்வையாளர் அருமைராஜ் பேசுகையில் ஆரம்பக் கல்வியை தாய் மொழியிலேயே கற்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேருங்கள் என்றும் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தார். அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் கரிக்காரன்புதூர் கிராமத்தில் பிறந்தவர் ஓவியா மேற்குவங்க மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக ஒரு தமிழச்சி உள்ளார் என்பதை பெருமையாக கூறினார். தமிழை அதிகமாக நேசித்ததால் அவர் தமிழ்ஓவியா என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக IAS தேர்வு, நேர்முகத் தேர்வில் தெரிவித்துள்ளார் என மாணவர்ளிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும், நமது இலையூர் பள்ளியில் பள்ளிவயது குழந்தைகளை சேருங்கள் எனவும் கூறினார்.ஆண்டு விழாவில் இலையூர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கோரியம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் விமலநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், காலை, மதிய உணவு சமையலற்கள் உட்பட ஏராளமான பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள் என கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். கலை நிகழ்ச்சி தொகுப்பாளராக சுகன்யா ஆசிரியர் செயல்பட்டார். கலைத் திருவிழா போட்டிகளில் குறுவள மைய அளவில், வட்டார அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள்,விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.