
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கீழ்குளம் சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.கோபால் தலைமை வகித்தார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் த.மனோதங்கராஜ் எம் எல் ஏ மற்றும் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் செ.மெ. மதிவதனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மதிவதனி பேசுகையில்,ஒன்றிய பிஜேபி அரசு தங்களது சாதனைகளைச் சொல்லி வெற்றி பெற வாய்ப்பு இல்லாததால் மதத்தை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். பெண்களுக்கு உரிமைக்காக குரல் கொடுத்ததே திமுக தான். உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு, சொத்தில் சம பங்குரிமை என பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே திமுக அரசு தான். மக்களை மேம்படுத்துவது மட்டுமே தமிழக அரசின் திட்டம் என புரிந்து கொள்ள வேண்டும். சிறந்த கல்வி அறிவை பெற்றால் தான் நாம் முன்னேற முடியும் என்று எண்ணத்தில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என பேசினார். நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் மரிய சிசுகுமார் உள்பட கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.