மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா;
இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன், Indian Paralympic Committee, Tamilnadu Para Volley Association ஆகியவற்றின் சார்பில், 13-வது Senior National Sitting Para VolleyBall Championship - 2025 போட்டி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தோக்கவாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில், கடந்த 21.03.2025-ல் தொடங்கி, 3 நாள்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், இராஜஸ்தான், ஹரியானா, உத்ரகாண்ட், உத்ரபிரதேசம், பீகார், சிக்கிம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய 16 மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு விளையாடினர். இந்த சிட்டிங் வாலிபால் போட்டி, Knock-out முறையில் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்றன. இறுதிப் போட்டிகள் (23.03.2025 - மாலை) நடைபெற்றன. இப்போட்டிகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.S. மூர்த்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் A.M. விக்ரம ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற மகளிர் இறுதிப்போட்டியில், ஹரியானா அணியும், ஜார்க்கண்ட் அணியும் மோதினர். இதில் 25:22, 25:17 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. முறையே ஜார்க்கண்ட், கர்நாடகா, இராஜஸ்தான் ஆகிய அணிகள் 2, 3, 4-வது இடங்களைப் பிடித்தனர். இதேபோல ஆடவர் இறுதி போட்டியில் ஹரியானா அணியும் கர்நாடகா அணியும் விளையாடினர். இதில் (3 செட்டுகளில்) 25:20, 25:23, 25:14 என்ற புள்ளி கணக்கில், 3-0 என்ற செட்டுகளில், ஹரியானா அணி வெற்றி பெற்றது. முறையே, கர்நாடகா, இராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய அணிகள் 2, 3, 4 ஆகிய இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் S. கோகிலா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாநிலத் தலைவர் A.M. விக்கிரம ராஜா உள்ளிட்டோர் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு பணப்பரிசாக ரூபாய் 35 ஆயிரம் மற்றும் கோப்பை, மகளிர் அணிக்கு ரூபாய் 30 ஆயிரம், கோப்பை உள்பட 2 இலட்ச ரூபாய் மதிப்பிலான பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரர்கள்- வீராங்கனைகள், சர்வதேச பாரா சிட்டிங் வாலிபால் போட்டிக்கு, இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாராவாலி சங்க நிர்வாகிகள் டாக்டர் ஜி. ராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், K.M. ஷேக் நவீத், D. பரந்தாமன், கிருஷ்ணமூர்த்தி சக்தி வெங்கடேஸ், ராம்குமார், உள்பட பலரும் கலந்துகொண்டனர். -------------------------------------