மேலும் ஒருவர் சரண்
ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒருவர் சரண் இதுவரை 13 பேர் சிக்கி உள்ளனர்;

சேலம் மாவட்டம் கிச்சிப் பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (30). இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி தனது மனைவி சரண்யா உடன் ஜான் காரில் சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜானை இரண்டு கார்களில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் பின் தொடர்ந்து வந்தது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ஜானின் காரை வழிமறித்த அந்த கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த படுகொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை கும்பலைச் சேர்ந்த சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். மேலும் வெட்டுக்காயம் அடைந்த கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களுடன் சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவக்குமார், சேது வாசன் ஆகிய 5 பேர் சேலத்தில் பதுங்கி இருந்தனர். அவர்களை சித்தோடு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் கடந்த 20--ந் தேதி அவரது கூட்டாளி சலீம் என்பவர் உடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜானின் மனைவி சரண்யா மற்றும் உறவினர்கள் ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் சரண்யாவிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கிட்டத்தட்ட 4 மணி நேரம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது சரண்யா தனது கணவர் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணம் அடைந்ததால் சித்தோடு போலீசார் நேற்று கார்த்திகேயனை கைது செய்தனர். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகவனேஸ்வரன் என்பவர் ஈரோடு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் இந்த கொலை தொடர்பாக சேலம், கிச்சி பாளையத்தை சேர்ந்த துரைசாமி (24) என்பவர் சரண் அடைந்தார்.