வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீர்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூர் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீர்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.;

Update: 2025-03-27 10:30 GMT
வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீர்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை
  • whatsapp icon
அரியலூர், மார்ச் 27- கீழப்பழுவூர் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான கருப்பூர் சேனாபதியிலுள்ள நிலத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கீழப்பழுவூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் முரளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள்: சுற்றுச்சூழல் அமைப்புத் தலைவர் மணிவேல், சமூக ஆர்வலர் சங்கர், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள்: தோண்டப்படவுள்ள இந்த சுண்ணாம்புக் கல் சுரங்கத்தைச் சுற்றி 100}க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதியில் இருந்தும், கனிம துறை நிதியிலிருந்தும் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளுக்கு தேவையான காய், கனி மரங்களை சுரங்கப் பகுதிகளில் நட்டு வளர்க்க வேண்டும். பழுவேட்டையர் பேரவைத் தலைவர் கோ.இ.கார்த்திக்குமார்: ஏற்கெனவே இயங்கி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, உரிய வல்லுநர் குழு அமைத்து, சுரங்கம் உள்ள பகுதியை முழுமையாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.செட்டிநாடு சிமென்ட் ஆலை தயாரித்துள்ள இந்த வரைவு திட்ட அறிக்கைகள் காலவதியானவை, அதனை ரத்துச் செய்ய வேண்டும். தமிழப்பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலர் முடிமன்னன்: ஏற்கனவே தோண்டப்பட்டுள்ள சுரங்கங்களால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்துள்ளது. இந்நிலையில் மீண்டும், மீண்டும் புதிய சுரங்கங்களால் இம்மாவட்ட்ததில் முற்றிலும் நீர் மட்டம் குறைந்து, பாலைவனமாகிவிடும். பசுமையாக உள்ள இந்த சேனபாதி கிராமத்தில், சுரங்கம் தோண்டுவதால் அங்கு விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ்களம் இளவரசன்: சுரங்கம் தோண்டப்படும் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்று கூறுவது இது மோசடியாக உள்ளது. இந்த சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் கிராம மக்கள் பயனடைவது கிடையாது. இந்த ஆலை, காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை இதுவரை நீர்நிலைகளாக மாற்றியது கிடையது. காப்புக் காடுகளாக ஆக்கியது கிடையாது. இதுகுறித்து தொடர்ந்து வழியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஆலை நிர்வாகம் தயாரித்துள்ள ஆய்வறிக்கைகள், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து மனுக்களை பெற்ற ஆட்சியர் பொ.ரத்தினசாமி, அவைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar News