கழிவுநீர் குட்டையாக மாறிய பட்டுநுால்சத்திரம் காலி மனை

கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-03-30 09:45 GMT
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, குன்றத்துார் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளனமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பட்டுநுால்சத்திரம் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ரேஷன் கடை மற்றும் ஏராளமான வணிக கடைகள் உள்ளன. பள்ளிக்கு செல்லும் மாணவர், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பாதசாரிகள் என, ஏராளமானோர் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில், குன்றத்துார் செல்லும் சாலை சந்திப்பில் உள்ள ஹோட்டல் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த சாலையோரம் உள்ள காலி மனையில் தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உட்பட அனைவரும் அவதி அடைந்து வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவகத்தற்கு செல்லும் பொதுமக்கள் நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். தவிர, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ள இப்பகுதியில், பன்றிகள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. திடீரென சாலையை கடக்கும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News