அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்
பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், வருவாய் துறையினர், அம்பேத்கர் சிலையை அகற்றினர்;

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகே, இரு தினங்களுக்கு முன் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.உத்திரமேரூர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிலை வைத்த குழுவினருடன் பேச்சு நடத்தினர். அதில், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை தாங்களே அகற்றிவிடுவதாக சிலை வைத்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, வருவாய் துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை, 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர், சிலை அருகே கூடினர். பின், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆஷிக் அலி, உத்திரமேரூர் தாசில்தார் தேன்மொழி தலைமையிலான வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.தொடர்ந்து, அங்குகூடியிருந்த கிராமத்தினரிடம் பேச்சு நடத்தினர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், வருவாய் துறையினர், அம்பேத்கர் சிலையை அகற்றினர்.