
மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் “கோஸ்டல் சைக்கிளில் தான்” விழிப்புணர்வு பேரணி கடந்த 7ஆம் தேதி துவங்கியது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி மையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 125 சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் பங்கேற்று, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடந்து, மொத்தம் 6 ஆயிரத்து 553 கி.மீ பயணம் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் இன்று (திங்கட்கிழமை) சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நிறைவு பெறுகிறது. இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தென் மண்டல ஐ.ஜி சரவணன் நேற்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்: பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி விளையாட்டு நிகழ்வாக மட்டுமன்றி தேசப் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. சட்டவிரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதம், வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதே இதன் நோக்கம். பொது மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை தென் மண்டல ஐ.ஜி.கேட்டுக்கொண்டார். நிறைவு விழாவில் சி.ஐ.எஸ்.எப் டைரக்டர் ஜெனரல் ரஜ்விந்தர் சிங் பாட்டி, கூடுதல் டைரக்டர் ஜெனரல் சுதிர் குமார் மற்றும் ஐ.ஜி ஜோஸ் மோகன், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.