திங்கள்சந்தையில் இருந்து மேல் மிடாலம் செல்வதற்காக கருங்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பார் அருகில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோவும், பஸ்ஸும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்ஸும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் வேல்முருகன் (35), ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த கூலி தொழிலாளிகள் ஜெகன் (45) ஐயப்பன் (34) ஆகிய மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரணியல் போலீசார் சேதமடைந்த ஆட்டோ, பஸ் ஆகியவற்றை அப்புறப்படுத்தி காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.