ஊராட்சி தலைவியின் அண்ணன் மாமுல் கேட்ட வழக்கில் கைது

பணம் கேட்டு மிரட்டல் விடுத்த ஸ்ரீதர், என்பவரை, ஒரகடம் போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-03-31 10:46 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வாரணவாசியில், கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதன் குழு தலைவராக ஆதனுாரைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன், 39, என்பவர் உள்ளார். இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வினித் மற்றும் ஊழியர்கள், இம்மாதம் 21ம் தேதி, ஓரகடம் அடுத்த, பனையூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு, கழிவை எடுக்க சென்றனர். அப்போது அங்கு வந்த, எழிச்சூர் ஊராட்சி தலைவி, தி.மு.க.,வைச் சேர்ந்த ஸ்ரீவித்யாவின் அண்ணன் ஸ்ரீதர், ஊராட்சி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கழிவு எடுக்க பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, எதுவாக இருந்தாலும் எங்கள் நிறுவனத்தில் பேசிக் கொள்ளும்மாறு வினித் கூறியுள்ளார். இதனால், அத்திரமடைந்த ஸ்ரீதர், தொழிற்சாலை வளாகத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து, வினித், தொழிற்சாலை குழுத் தலைவர் கார்த்திக் பாண்டியன் கூறியுள்ளார். ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரித்த போலீசார், பணம் கேட்டு மிரட்டல் விடுத்த ஸ்ரீதர், 29, என்பவரை, ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.

Similar News