குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குருந்தன்கோடு ஒன்றிய குழு சார்பிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பிலும் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குருந்தன்கோடு ஒன்றிய குழு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே!! விவசாயிகளின் வாழ்க்கையை பாழ்படுத்தும் வகையில் ஆலங் கால்வாய் மற்றும் புதுக்குளத்தில் மருத்துவமனை கழிவுகளை கொட்டிய வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும் செயல் அலுவலர் மீதும் நடவடிக்கை எடுத்திடு. ஏழை விவசாயிகளை வஞ்சிக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடு என எழுதப்பட்டுள்ளது. அதேபோன்று குளச்சல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!! வில்லுக்குறி பேரூராட்சி வள மீட்பு பூங்காவில் திடக்கழிவுகளுடன் மருத்துவ கழிவுகளை கலந்து கொட்டி தீயிட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய பேரூராட்சி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடு. போராட்டத்தை தூண்டாதே! என கூறப்பட்டுள்ளது. வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை உட்பட பேரூராட்சிகளின் எல்லா பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.