கோவை: சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்களால் அதிர்ச்சி !
ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.;
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்-விமலா தம்பதியினர், நேற்று முன்தினம் இரவு சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஷெரீப் பாய் பிரியாணிக் கடையில், தங்கள் 6 வயது மகளுக்காக சோமேட்டோ உணவு விநியோக செயலி மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு மட்டனுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி வந்துள்ளது. அதிலும் புழுக்கள் நெளிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவர்கள் சரவணம்பட்டியில் இருக்கும் ஷெரீப் பாய் பிரியாணிக் கடைக்குச் சென்று முறையிட்டனர். ஆனால், கடை ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல், பணத்தையும் திரும்ப தர மறுத்துவிட்டனர். மேலும், எங்களுக்கு தமிழ் தெரியாது, நாங்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இதனால் மனம் உடைந்த பெற்றோர், உணவு பாதுகாப்புத் துறைக்கும் காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தனர். ஆனால், புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒருவேளை என் மகள் அந்த உணவை சாப்பிட்டிருந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அச்சத்துடன் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம், உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.