அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கும்மமுனிமங்களம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.அகத்திய மாமுனி இத்தலத்திற்கு வருகை தந்து ஈஸ்வரனை போற்றிப்பாடியதால் அகத்தீஸ்வரர் என பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. வரலாற்று சிறப்புவாய்ந்த இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக நேற்று இரவு பொன்னேரி விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.மலரலங்காரத்தில் ஜொலித்த விநாயக பெருமான் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை கொடியேற்றத்தின் ஒருபகுதியாக அகத்தீஸ்வர பெருமானுக்கும் ஆனந்தவள்ளி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி சிவாச்சார்யார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது.இதனை தொடர்ந்து சிவபெருமான் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமான் அகத்தீஸ்வரரை தரிசித்து சென்றனர்.