கள்ளக்குறிச்சி: வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...
கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் e-filing முறையை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 'இ- பைலிங்' என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அனைத்து வழக்குகளையும், சட்ட ஆவணங்களையும் மின்னணு முறையில் அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் நீதிமன்றங்களுக்கு நேரில் செல்லாமல் தங்களது இடத்திலிருந்தே, வழக்குகளை பதிவு செய்யலாம். குறிப்பாக 'காகிதமில்லா தாக்கல்' செய்யும் முறையை ஊக்குவிப்பதையும், நேர செலவையும் சேமிக்கவும், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் வகையிலும் 'இ-பைலிங்' முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வழக்கறிஞர், மனுதாரர் இணையத்தில் பயனர் கணக்கை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 'இ-பைலிங்' நடைமுறைக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, வழக்குகளை 'இ-பைலிங்' செய்ய தேவைப்படும் 'ஓ.சி.ஆர்., ஸ்கேனர்' விலை அதிகம், மாதந்தோறும் ஒருமுறை 'பாஸ்வேர்டு' மாற்ற வேண்டும், எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் வழங்காமல் எந்த ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய முடியாது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பிறகே அவசர வழக்கினை விசாரிக்க வேண்டிய நிலை, அனைத்து பகுதிகளிலும் 'இ-பைலிங்' செய்வதற்கேற்ப அதிவேக இணைய வசதி இல்லை உட்பட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.