குமரி மாவட்டம் தூத்தூர் செயின்ட் அல்போன்சா தெருவை சேர்ந்தவர் மரிய கெபின் மனைவி பிரியங்கா (34). இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர். மரிய கெபின் ஆழ்கடலின் மீன் பிடிக்க சென்று 23 நாட்கள் ஆகிறது. வீட்டில் பிரியங்கா, 2 மகள்கள் மற்றும் வயதானவர்கள் உடன் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மகள்கள் பள்ளிக்கு சென்றனர். கெபினின் தாய் வெளியே சென்றிருந்தார். காலை 10 மணி அளவில் தந்தை தூத்தூரில் நகை கடையில் அடகு வைக்க சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது காம்பவுண்ட் கேட் உட்பக்கமாக பூட்டி இருந்தது. மருமகளை அழைத்த போது எந்த பதிலும் இல்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கேட்டு பூட்டை திறந்து பார்த்தபோது முகத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிரியங்கா மயங்கிய நிலையில் கிடந்தார். உடன் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரியங்கா முகத்தில் இருந்தும், மர்ம உறுப்பில் இருந்தும் இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் சம்பவ இடங்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா மயங்கிய நிலையில் இருப்பதால், மயக்கம் தெளிந்த பின் நடந்த சம்பவம் என்னவென்று தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.