கோவை: அருகே கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய யானைகள் !

தடாகம், மாரியம்மன் கோவில், வடக்குப் பகுதியில் உள்ள வாத்தியார் தோட்டத்தில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் புகுந்து கால்நடை தீவனப் பயிர்களை தின்றதால் பரபரப்பு.;

Update: 2025-04-05 07:47 GMT
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள், வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதுடன், விளைநிலங்களில் உள்ள பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்களையும் நாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், யானைகளின் தொல்லை நீடிக்கிறது. இந்நிலையில், தடாகம், மாரியம்மன் கோவில், வடக்குப் பகுதியில் உள்ள வாத்தியார் தோட்டத்தில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் புகுந்து கால்நடை தீவனப் பயிர்களை தின்றன. தோட்டத் தொழிலாளர்கள் டார்ச் லைட் அடித்ததும், யானைகள் வனப்பகுதிக்குள் திரும்பி ஓடின. இந்த சம்பவத்தை தொழிலாளி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து விவசாய சங்கக் குழுவில் பகிர்ந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களிலும் யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், இதனை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேலி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News