கோவை: போதைப்பொருள் விற்பனை- குண்டர் சட்டம் பாய்ந்தது !
போதைப்பொருள் விற்பனை வழக்கில் சிறையில் இருக்கும் அந்த 9 பேரிடமும் நேற்று குண்டர் சட்டத்தின் நகல் வழங்கப்பட்டது.;
கோவை மாநகரில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மெத்தப்பேட்டைன் போதைப்பொருள் விற்றதாக மிதுன் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் ஜெகநாதன், கோகுல்ராஜ் ஆகியோரும் பிடிபட்டனர். இவர்கள் பெங்களூரில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த அஸ்வின், அப்துல், சலீம், அசார், அன்சாத், அமல், ரியாஸ் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், போதை ஸ்டாம்புகள், செல்போன்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆணையர் உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறையில் இருக்கும் அந்த 9 பேரிடமும் நேற்று குண்டர் சட்டத்தின் நகல் வழங்கப்பட்டது.