தாது மணல் முறைகேடு விவகாரம்: சென்னை, நெல்லையில் சிபிஐ சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக, நெல்லை, சென்னையில் குவாரி உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.;

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வி.வி. மினரல்ஸ் நிறுனத்துக்கு சொந்தமாக தாதுமணல் ஆலைகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தினர். அதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தாது மணல் ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கும் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். திசையன்விளை கீரைக்காரன்தட்டு பகுதியில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல, அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் செயல்பட்டு வரும் வி.வி. மினரல்ஸ் அலுவலகத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், எழும்பூரில் உள்ள வி.வி. மினரல்ஸ் தொடர்புடைய மற்றொரு அலுவலகம், எழும்பூர் தமிழ் சாலையில் வசித்து வரும் ஆடிட்டர் ஹரி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.