சேலத்தில் டாஸ்மாக் பாரில் இருதரப்பினர் மோதல்
விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்;
சேலம் அழகாபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் உள்ள பாரில் நேற்று இரவு ஏராளமானோர் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கிருந்த வாலிபர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்து தாக்கிக்கொண்டனர். இதை பார்த்து அங்கு மது அருந்தி கொண்டிருந்த மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கேட்காமல் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் உடனடியாக அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரவு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சரவணக்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை பாருக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்த முயன்றனர். அப்போது ஆத்திரம் அடைந்த 3 பேர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் சேகரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து டாஸ்மாக் பாரில் தகராறு செய்ததோடு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரமோத்ராஜ் (வயது 27), தாரமங்கலம் நரைன் (27), பரமத்திவேலூரை சேர்ந்த சதீஷ் (27) ஆகிய 3 பேரையும் அழகாபுரம் போலீசார் கைது செய்தனர்.