கோவை: வனத்துறையினரை விரட்டிய ஒற்றை காட்டு யானை !
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று வனத்துறையினரை விரட்டிய சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.;
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நேற்று வனத்துறையினரை விரட்டிய சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான காட்சிகளை பக்தர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்ய, தற்போது அவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பூண்டி அடிவாரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் உலவும் ஒற்றை காட்டு யானை ஒன்று, அடிவாரத்தில் உள்ள பழக்கடைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் உணவுக்கூடங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. உணவுப் பொருட்களை ருசித்த அந்த யானை, மீண்டும் மீண்டும் அப்பகுதிக்கு வருவது வழக்கமாகிவிட்டது. சம்பவத்தன்று, கோவிலுக்கு வந்த பக்தர்கள் அந்த யானையைக் கண்டதும் அச்சமடைந்தனர். உடனடியாக, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்ட முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த யானை வனத்துறை ஊழியர்களை துரத்தியது. நிலைமையை உணர்ந்த வன ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை கண்ட பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.