ஈரோடு அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2025-04-07 16:25 GMT
ஈரோடு அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவு
  • whatsapp icon
இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பவானி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பண்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முயற்சித்து வருகிறது. இங்கு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமத்தினர் தங்களது விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படும். 7 மீட்டர் அகலத்துக்கு இருந்த நெடுங்சாலையை 10 மீட்டராக அகலப்படுத்திவிட்டு, சுங்கச்சாவடி அமைப்பது என்பது ஏற்புடையதல்ல. மேலும் இந்த வழித்தடத்தில் சாலை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்க வேண்டும்,” என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, “இருவழிச்சாலையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி அமைத்து வருகின்றனர். இதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன,” என்றார். தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டே முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் எனக்கூறி, இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். பின்னர் சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Similar News