கோவை: தென்னையில் ஈக்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயிகளிடையே தென்னை சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம்.;
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், தோட்டக்கலைத்துறையும் இணைந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயிகளிடையே தென்னை சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம்களை தீவிரமாக நடத்தி வருகின்றன. இம்முகாம்களின் தொடர்ச்சியாக, நேற்று பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் விழிப்புணர்வு வாகனம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் திரு. ஜி. அழகுமலை அவர்கள் தலைமை உரையாற்றினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பூச்சியல் இணை பேராசிரியர் கணேசன் அவர்கள் தென்னை சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உரையை வழங்கினார். இந்த முகாமில் 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்த செயல் விளக்கங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.